தமிழகம்-புதுச்சேரியில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு


தமிழகம்-புதுச்சேரியில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு
x
தினத்தந்தி 27 March 2019 10:00 PM GMT (Updated: 27 March 2019 8:51 PM GMT)

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி மெயின் ரோடு ரகுராமன் திருமண மண்டபம் எதிரில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை மந்திரி பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர், அங்கு நடந்த கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அ.தி.மு.க.-பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து மகத்தான கூட்டணியை அமைத்து உள்ளோம். இதனால் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. இந்த மண்ணில் பிறந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு இருந்த கனவுகள்தான் நமது பிரதமர் நரேந்திரமோடிக்கும் உள்ளது.

அதனால்தான் பிரதமர் 50 கோடி ஏழைகளுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்கினார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் 10 கோடி குடும்பங்களுக்கு இலவச கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. 7 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் 60 வயதை கடந்தவுடன் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய உறுதியான வலிமையான பிரதமரை நாம் பெற்று இருக்கிறோம். ஆனால் தி.மு.க.வும், காங்கிரசும் நமது ராணுவத்தின் வல்லமையையும், துணிச்சலையும் பற்றி கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் நமது ராணுவத்தை குறைத்து மதிப்பிடுவது வெட்கக்கேடானது. இதனால் அவர்கள் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக இருப்பது தெரிகிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி வெளிப்படையான நம்பகத்தன்மை வாய்ந்த ஆட்சியை வழங்கி வருகிறார். 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கொள்ளையடித்தவருக்கு தூத்துக்குடி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஊழல் அரசியல்வாதிகளுக்கு மீண்டும் வாக்களித்தால் மக்களின் நலன்கள் கேள்விக்குறியாகி விடும்.

பிரதமர் மோடி கடந்த முறை மதுரை வந்தபோது, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் மரியாதையும், கண்ணியமும், அவர்களது கோரிக்கையும் ஏற்று கொள்ளப்படும் என்று மேடையில் அறிவித்தார். தூத்துக்குடி துறைமுகம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் கிழக்கு கடற்கரை வழியாக எட்டு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலானது சமூக ஊழியரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், ஊழல் வேட்பாளருக்கும் இடையே நடைபெறும் யுத்தம். மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மிகச்சிறந்த தேசியவாதியாகவும், ஏழை மக்களின் நலனில் அக்கறை கொள்கிற தலைவராகவும் திகழ்ந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். மக்களுக்காக சேவை புரிய தயாராக உள்ள டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.

விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், பா.ஜனதா தேசிய செயலாளர் ரவி, மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் பாலாஜி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி, த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து நின்றனர்.

முன்னதாக கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மத்திய மந்திரி பியூஸ் கோயலுக்கு அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story