கோவில் விழாக்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை
கோவில் விழாக்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை, தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் தி.சோமசுந்தரம் சந்தித்து மனு அளித்தார்.
அப்போது தமிழ்நாடு மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என்.சிவாஜி, வி.ஆர்.கணேசன், இ.எம்.கனி, பி.கருப்பையா, பி.எம்.இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தமிழக பாரம்பரிய, கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் தமிழகம் முழுவதும் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே நலிவுற்ற, ஏழ்மையான பொருளாதார நிலையில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி மேலும் வறியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நமது பாரம்பரிய, கிராமிய, நாட்டுப்புற கலைஞர்களுக்கு பங்குனி, சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் (கோவில் திருவிழாக்கள், பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்) தான் நிகழ்ச்சிகள் நடத்த பெரும்பாலான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த நாட்களில் தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதால் நிகழ்ச்சிகள் நடத்த இயலாத சூழல் நிலவி வருகிறது.
தமிழக கோவில் திருவிழாக்கள், பாரம்பரிய வழிபாடு மற்றும் பண்பாடு சார்ந்த விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும், தேர்தல் பிரசாரத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத காரணத்தால், குறைந்தபட்ச ஒலிபெருக்கி அமைப்புகளை பயன்படுத்தவும் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story