கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் கோவையில் 8-ந் தேதி மோடி பிரசாரம், முதல்-அமைச்சர், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 8-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் மதுரையிலும், பிப்ரவரி மாதம் திருப்பூர், கன்னியாகுமரியிலும் கடந்த 6-ந் தேதி சென்னையிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்ய தமிழகம் வர உள்ளார். அவர், வருகிற 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கோவை கொடிசியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி 8-ந் தேதி கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் அவர் கோவை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து அவர் கார் மூலம் பொதுக்கூட்டம் நடக்கும் கொடிசியா மைதானம் வருகிறார். கோவை பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் அன்று இரவே விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story