கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் பிரசாரம் தொண்டர்கள் உற்சாகம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் பிரசாரம் தொண்டர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 29 March 2019 9:45 PM GMT (Updated: 29 March 2019 8:31 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள். இதனால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.பி. முனுசாமி போட்டியிடுகிறார். ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ணரெட்டி போட்டியிடுகின்றார். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டிக்கு ஆதரவு திரட்டி ஓசூர் ராம் நகர் பகுதியில் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதனை தொடர்ந்து பாகலூர், பேரிகை, வேப்பனப்பள்ளி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். பின்னர் கிருஷ்ணகிரியில் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆதரவு திரட்டுகிறார். இரவு ஊத்தங்கரையில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் ஆகியோரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஓசூரில் தளி சாலையில் உள்ள 100 அடி ரோட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

அதே போல அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பிரசாரம் செய்தார். இன்று மாலை அவர் சூளகிரி, கிருஷ்ணகிரி கார்னேசன் திடல், காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து பேசுகிறார். முன்னதாக ஓசூரில் அவர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு திரட்டுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் வருகையால் தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. மேலும் கட்சி தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Next Story