ராகுல்காந்தி அறிவித்தபடி 25 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும் ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் வைகோ பேச்சு


ராகுல்காந்தி அறிவித்தபடி 25 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும் ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 30 March 2019 5:00 AM IST (Updated: 30 March 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி அறிவித்த திட்டத்தால் 25 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைக்கும் என்று ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் வைகோ பேசினார்.

ஈரோடு,

தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அ.கணேசமூர்த்திக்கு வாக்கு கேட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய வைகோ, சூளை, கனிராவுத்தர் குளம், வில்லரசம்பட்டி, திண்டல், மேட்டுக்கடை, நசியனூர், சித்தோடு, காலிங்கராயன்பாளையம், சூரியம்பாளையம், ஆர்.என்.புதூர், பி.பி.அக்ரகாரம் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அவர் மேட்டுக்கடை பகுதியில் வாக்குசேகரித்தபோது பேசியதாவது:–

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்து உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அ.கணேசமூர்த்திக்கு வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்று வந்திருக்கும் வேட்பாளர் கணேசமூர்த்திக்கு தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளாக இருக்கும் பொதுமக்களாகிய உங்களிடம் வந்திருக்கிறேன்.

தமிழகத்தில் 80 லட்சம் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். 4–ம் வகுப்பு படித்தவர்களுக்கு தகுதியான ஒரு வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 4 ஆயிரம் பேர் பட்டதாரிகள். அப்படி என்றால் வேலை இல்லாத திண்டாட்டம் எப்படி உள்ளது. பி.ஈ., எம்.ஈ. படித்தவர்கள் ரூ.7 ஆயிரத்துக்கோ, ரூ.8 ஆயிரத்துக்கோ வேலை கிடைக்காதா? என்று ஏங்குகிறார்கள். இந்திய அளவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் இருக்கும் மாநிலம் என்று மத்திய அரசின் புள்ளியியல் துறை கூறுகிறது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று கூறிய பிரதமர் மோடி 2 ஆயிரம் பேருக்கு கூட வேலைவாய்ப்பினை உருவாக்கவில்லை. ஒவ்வொருவரின் வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு ரூ.15 லட்சம் கொட்டும் என்றார். ஆனால், நடந்தது என்ன? வங்கிகளில் சேமித்த தொகை அவர்களின் கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கோ, ரூ.3 ஆயிரத்துக்கோ குறைவாக இருந்தால் அதற்கு அபராதம் விதித்து பணத்தை பிடித்தம் செய்தார். இப்படி வங்கிக்கணக்குகளில் அபராதமாக வசூல் செய்த தொகை மட்டும் ரூ.10 ஆயிரத்து 321 கோடி.

மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு பெருநிறுவனங்களுக்கான அரசு. ஸ்டெர்லைட் ஆலைக்காக 13 பேரை மத்திய அரசு கடந்த மே மாதம் 22–ந் தேதி சுட்டுக்கொன்றது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்காக மத்திய அரசு திட்டமிட்டு சிறப்பு பிரிவை அழைத்து சுட்டுக்கொன்றது.

வணிகத்தை சரக்கு மற்றும் சேவை வரி நாசப்படுத்தி விட்டது. மளிகைக்கடை வைத்து இருப்பவர்கள் எல்லாம் ஆடிட்டர் வைத்துக்கொள்ள முடியுமா?. ஈரோட்டிலேயே 5 ஆயிரம் ஜவுளிக்கடைகள் நசிந்து போய்விட்டன. விவசாயம் மண்ணாகப்போய் விட்டது. உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து 90 மீட்டர் சுற்றளவுக்கு நிலம் வீணாகப்போய்விடும். அதை விற்கவோ, பயன்படுத்தவோ முடியாது. குஜராத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு மின்சாரத்தை குழாய் மூலம் கொண்டு செல்வேன் என்று அறிவித்த மோடி, தமிழகத்துக்கு மட்டும் ஏன் வஞ்சகம் செய்ய வேண்டும்.

இப்படி தமிழகத்துக்கு எதிரான திட்டங்கள் வரும்போது, இங்கே ஆளுகின்ற அரசு அதை தடுக்க வேண்டாமா?. இவர்கள் தடுக்க முடியாது. ஊழல் புதைமணலில் சிக்கிக்கிடக்கும் ஆட்சி இது. பொள்ளாச்சி சம்பவம். அது மட்டுமா ஓசூரில் 15 கர்ப்பிணிகளுக்கு கெட்டுப்போன ரத்தத்தை செலுத்திய கோரம், கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் பாதித்த ரத்தத்தை செலுத்திய பாதகம் என்று தொடர்ந்து தமிழகத்தை நாசம் செய்து வருபவர்களுக்கு தண்டனை வழங்க ஒரு வாய்ப்பு வாக்குகளின் மூலம் கிடைத்து இருக்கிறது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஜெயித்தால் அனைத்து விவசாயக்கடன்களும் ரத்து என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறார். இது முடியும். ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி பொறுப்பு ஏற்ற மாநிலங்களில் 10 நாட்களில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். இதன் மூலம் இந்தியாவில் 25 கோடி பேர் பயன் அடைவார்கள். இந்த திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும். செயல்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், உலகம்போற்றும் பொருளாதார மேதை ரகுராம்ராஜன் கூறி இருக்கிறார்.

விவசாயிகளின் கண்ணீரை துடைக்கவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நமக்கு கிடைத்து இருக்கும் ஆயுதம்தான் வாக்குரிமை. அதை முறையாக பயன்படுத்தி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

முன்னதாக பேசிய வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, 1978–ம் ஆண்டு முதல் விவசாயிகள் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று உங்களுடன் சிறைக்கு வந்து, உற்ற தோழனாக உங்களில் ஒருவனாக உங்கள் கரம் பிடித்து வந்திருக்கிறேன். இன்னும் உங்களோடு இருப்பேன் என்று கூறினார். பிரசாரத்தின் போது அனைத்து கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் உடன் வந்தனர்.


Next Story