திருச்சியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ரூ.2½ கோடி பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


திருச்சியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ரூ.2½ கோடி பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 March 2019 4:45 AM IST (Updated: 31 March 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ரூ.2 கோடியே 51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் அருகில் நேற்று இரவு 8.30 மணி அளவில் தேர்தல் பறக்கும்படை தனித்தாசில்தார் இளவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், போலீஸ் ஏட்டு சேனாபதி ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக, திருச்சி தில்லைநகரில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக்கு சொந்தமான வேன் ஒன்று வந்தது. அந்த வேனை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியபோது, அங்கு ‘டிரங்க்’ பெட்டி ஒன்றில் கட்டு, கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், தில்லைநகரில் உள்ள வங்கியின் மெயின் அலுவலகத்தில் இருந்து பணத்தை சேகரித்து கொண்டு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பனையங்குறிச்சியில் வங்கிக்கு சொந்தமான பணசேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்வதாக வங்கி காவலாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேனில் காவலாளிகள் ரஞ்சித்குமார், பிரகாஷ், பிரதீப்குமார், அருண்சிங், டிரைவர் அந்தோணிராஜ் ஆகியோர் இருந்தனர். மேலும் அதற்கான ஆவணங்களும் வைத்திருந்தனர். ஆனால், வங்கிகள் பணப்பரிமாற்றம் என்பது மாலை 6 மணிக்குள் முடித்துவிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பணம் எடுத்து சென்றதால், வேனில் இருந்த ரூ.2 கோடியே 51 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அப்பணம் திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு தாசில்தார் ராஜவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) பாபு, துணைத்தாசில்தார் சிவகுமார் ஆகியோர் விரைந்து வந்தனர். மேலும் ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அங்கு பணக்கட்டுகள் எண்ணப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்-4,400. 500 ரூபாய் நோட்டுகள்-28,000. 200 ரூபாய் நோட்டுகள்-4,600. 100 ரூபாய் நோட்டுகள்-11,000. 50 ரூபாய் நோட்டுகள்-4,200. 20 ரூபாய் நோட்டுகள்-3,000. 10 ரூபாய் நோட்டுகள்-1,000 என மொத்தம் ரூ.2 கோடியே 51 லட்சம் இருந்தது.

பின்னர், அந்த பணம் மீண்டும் ‘டிரங்க்’ பெட்டியில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story