நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம் - தேர்தல் பார்வையாளர் தகவல்


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம் - தேர்தல் பார்வையாளர் தகவல்
x

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் செலவின பார்வையாளர் கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளராக பி.ஒய்.சவான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது தலைமையில் ஆய்வுக் கூட்டம் பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள், முகவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ராமதுரை, வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பி.துரைசாமி, தாசில்தார்கள் ரத்தினம், வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஒய்.சவான் கூறியதாவது:-

ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர் செலவு தொகையாக ரூ.70 லட்சம் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். வேட்பாளர்கள் தினசரி செலவு குறித்த விவரங்களை உரிய பதிவு புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும். இதற்காக 3 வண்ணங்களில் பதிவு புத்தகம் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளை நிற புத்தகத்தில் தினசரி ஆகும் அனைத்து வகை செலவுகள், இளஞ்சிவப்பு நிற புத்தகத்தில் பணம் வரப் பெற்ற விவரங்கள், மஞ்சள் நிற புத்தகத்தில் வேட்பாளரின் வங்கி பரிவர்த்தனை விவரங்களை தெரிவிக்க வேண்டும். செலவே செய்யவில்லை என்றால் அந்த தினங்களில் இல்லை என்று குறிப்பிட வேண்டும். பொதுக் கூட்டம், பிரசார கூட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும்.3 சட்டமன்ற தொகுதி சம்பந்தப்பட்ட செலவின புகார் களை 7588182376 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story