நாகர்கோவிலில் வயலில் பிணமாக கிடந்த தொழிலாளி எப்படி இறந்தார்? போலீஸ் விசாரணை


நாகர்கோவிலில் வயலில் பிணமாக கிடந்த தொழிலாளி எப்படி இறந்தார்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 April 2019 4:30 AM IST (Updated: 31 March 2019 8:31 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வயலில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வயல் வெளியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டி அருகே நேற்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து பிணமாக கிடந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் வடசேரி வெள்ளாளர் தெருவை சேர்ந்த சிவமணி (வயது 38) என்று தெரியவந்தது. ஆனால் சிவமணி எப்படி இறந்தார்? என்பது பற்றி தெரியவில்லை.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “சிவமணி எப்படியும் நேற்று முன்தினம் இரவே இறந்திருக்க வேண்டும். அவரது காலில் சிறிய காயங்கள் உள்ளன. ஆனால் உயிர் போகக்கூடிய அளவிற்கான காயங்கள் எதுவும் இல்லை. இதை வைத்து பார்க்கும்போது சிவமணி யாருக்கோ பயந்து ஓடி வந்திருக்க வேண்டும். அப்போது கால் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சிவமணி எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும். ஆனாலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

இறந்த சிவமணி கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். சிவமணி தினமும் இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதி தன் கணவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

இந்த நிலையில் கணவர் இறந்த தகவல் அறிந்து, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்த ஜோதி சிவமணியின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

Next Story