வீரபாண்டி பகுதியில் பிரசாரம்: விவசாயத்தை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் உறுதி


வீரபாண்டி பகுதியில் பிரசாரம்: விவசாயத்தை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் உறுதி
x
தினத்தந்தி 31 March 2019 10:15 PM GMT (Updated: 31 March 2019 4:59 PM GMT)

விவசாயத்தை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று வீரபாண்டி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் நேற்று காலை வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் பூலாவரியில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து பூலாவரி அக்ரஹாரம் பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, திறந்த வேனில் நின்றவாறு வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து உத்தமசோழபுரம், வீரபாண்டி, அக்கரபாளையம், சென்னகிரி, எஸ்.பாப்பாரப்பட்டி, மருளையம்பாளையம், ஆட்டையாம்பட்டி, ராஜாபாளையம், ராக்கிப்பட்டி, பெரிய சீரகாபாடி, கல்பாரப்பட்டி, வேம்படிதாளம், பெருமாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் பார்த்திபன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், வீரபாண்டி, உத்தமசோழபுரம் பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை தி.மு.க. வெற்றி பெற்றவுடன் ரத்து செய்யப்படும். இந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, ரூ.7 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்ததுபோல், தற்போது விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்படும். ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வோம். பண மதிப்பிழப்பால் மக்கள் அடைந்த துன்பத்தை மறக்க முடியாது. ஆகவே, மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி அமைய என்னை வெற்றி பெறச்செய்யுங்கள். அதாவது, இந்த தொகுதியில் மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிற்பதாக நினைத்து எனக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், என கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

இந்த பிரசாரத்தின்போது, வீரபாண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெண்ணிலா சேகர், ஆட்டையாம்பட்டி பேரூராட்சி செயலாளர் முருகபிரகாஷ், நிர்வாகிகள் பாரப்பட்டி குமார், ராஜா, காங்கிரஸ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அய்யாவு உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story