அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு


அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
x
தினத்தந்தி 31 March 2019 10:30 PM GMT (Updated: 31 March 2019 9:37 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

வடமதுரை,

அய்யலூர் பேரூராட்சியில் பாலத்தோட்டம், குப்பாம்பட்டி, கிணத்துப்பட்டி, காக்காயன்பட்டி, பஞ்சந்தாங்கி, ஏ.கோம்பை உள்ளிட்ட 13 மலைக்கிராமங்கள் உள்ளன. அய்யலூரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள மலைக்கிராமங்களை ஒன்றிணைத்து ஏ.கோம்பையை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏ.கோம்பை தனி ஊராட்சியாக அறிவித்தால், அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலை உறுதி செய்யப்படும். மத்திய-மாநில அரசுகளின் அனைவருக்கும் வீடு திட்டம், இலவச ஆடு மாடுகள் திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் முழுமையாக கிடைக்கபெறும். இதன்மூலம் மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

ஆனால் ஏ.கோம்பையை தனி ஊராட்சியாக அறிவிக்க 2 முறை பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு ஊராட்சியாக அறிவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கிராமங்களில் சாலை, குடிநீர், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி பாலத்தோட்டம், காக்காயன்பட்டி, பஞ்சந்தாங்கி, ஏ.கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிப்பதாக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்துள்ளனர். 

Next Story