விருதுநகர் அருகே ரூ.2¼ கோடி நகைகள்– வெள்ளி பொருட்கள் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
விருதுநகர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2¼ கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்,
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாகன சோதனை செய்வதற்காக 21 பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு விருதுநகர்–சிவகாசி ரோட்டில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் சங்கர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அங்கு அட்டைபெட்டிகளில் நகைகளும், வெள்ளி பாத்திரங்களும் இருப்பது தெரியவந்தது. வேனில் இருந்த ஊழியர்கள், மதுரையில் உள்ள ஒரு நகை நிறுவனத்தில் இருந்து பல்வேறு ஊர்களில் உள்ள நகை கடைகளுக்கு அவற்றை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை.
இதைத்தொடர்ந்து வேனில் இருந்த ரூ.2 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 377 மதிப்பிலான நகைகளையும், ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 818 மதிப்பிலான வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்து விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் விருதுநகர்–சிவகாசி ரோட்டில் எல்கைபட்டி விலக்கில், பறக்கும்படை குழுவினர் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அருப்புக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.68 ஆயிரத்து 550–ஐ பறிமுதல் செய்தனர்.
மேலும், காங்கேயம் அருகே உள்ள செட்டியார்பாளையம் என்ற இடத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் (29) என்பவரிடமிருந்து ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
உடுமலையில் உள்ள கொங்கல் கிராமத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை–திருவாரூர் சாலையில், உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 50–க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களுக்கு டோக்கன் மூலம் பெட்ரோல் நிரப்பி கொண்டிருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் அங்கு சென்ற போது, மோட்டார் சைக்கிளில் ரூ.150–க்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்ட ‘டோக்கன்’களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.