நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று காலை கனகசெட்டிகுளத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–
கட்சி தொடங்கி 2 மாதத்தில் மாநிலத்தில் ஆட்சியை பிடித்த கட்சி என்.ஆர்.காங்கிரஸ். தற்போது இந்த தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். நமது கூட்டணி நாட்டில் நிலையான ஆட்சியை தரும். தேர்தல் கருத்துக் கணிப்பில் நமது கூட்டணி 300–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வர நாம் பணியாற்ற வேண்டும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னருடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே புதுச்சேரியில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். தற்போது ஆட்சியில் இருப்பவருக்கு இது தெரியும். மத்திய மந்திரியாக இருந்துள்ளவருக்கு நடைமுறை தெரிந்தும் நாடகம் ஆடுகின்றார்.
புதுச்சேரியை நான் குட்டிச்சுவர் ஆக்கியதாக கூறுகின்றார். புதுச்சேரியை குட்டிச்சுவர் ஆக்கி வருவது தற்போது ஆட்சி செய்து வருபவர்கள் தான். எங்கள் ஆட்சியில் மேம்பாலம், இணைப்புச்சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, படுகை அணைகள், நெசவாளர்கள், மீனவர்கள், முதியோர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான திட்டங்களை நிறைவேற்றினோம், கல்லூரி மாணவர்களுக்கு கட்டண நிதியுதவி கொடுத்தோம். தற்போது அவை வழங்கப்படவில்லை.
காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரசில் நான் முதல்–அமைச்சராக இருந்த போது மத்திய அரசிடம் பேசி பல்வேறு திட்டங்களை பெற்று வந்து செயல்படுத்தினேன். ஆனால் இன்று கவர்னருடன் சண்டை போட்டுக்கொண்டு திட்டங்களை செயல்படுத்தவில்லை. அரசு புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. நடைமுறையில் உள்ள திட்டங்களையும் செய்யவில்லை. மருத்துவமனைகளில் மருந்து இல்லை. அதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொள்கின்றனர். இளைஞரை நிறுத்தியுள்ளதாக கூறுகின்றனர். எப்போதுதான் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது? நமது வேட்பாளர் கோடீஸ்வரர் என்று கூறுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஏழையா? அவர் எப்பேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நிற்கலாமே? ஆனால் அவரால் நிற்க முடியாது. ஏனென்றால் முதல்–அமைச்சர் பதவியை எழுதி கொடுக்க வேண்டும். அடுத்த முதல்–அமைச்சராக நமச்சிவாயம் வந்துவிடுவார். அதனால் வைத்திலிங்கத்தை நிறுத்தியுள்ளார்.
நான் முதல்–அமைச்சர் நாற்காலியில் குறியாக இருப்பதாக கூறுகின்றார். அவர் எப்படி முதல்–அமைச்சர் பதவிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் நமச்சிவாயம் முதல்–அமைச்சர் என்று அறிவித்து விட்டு, காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் இவருக்கு முதல்–அமைச்சர் பதவி வழங்கப்படாமல் நாராயணசாமி முதல்–அமைச்சராக வந்து விட்டார். எனவே பிறரை குறை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திட்டங்களை நிறைவேற்றாததற்கு எதிர்க்கட்சிகளின் மீது பழியை போட்டு காலத்தை விரயம் செய்து வருகின்றார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் கருத்து பரிமாற்றம் சென்று சேராததால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை. அன்பு மிகுதியால் ஜெயலலிதா என்னை திட்டியுள்ளார். சில தொகுதிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட் தராததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அந்த தவறை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சியாளர்கள் புதுச்சேரியை எந்த அளவுக்கு சீரழிக்க முடியும் என்றுதான் சிந்திக்கின்றனர். லாட்டரி சீட்டுகள், சூது ஆகியவற்றை கொண்டு வருவது பற்றிதான் சிந்திக்கின்றனர். லாட்டரி சீட்டுகளை கொண்டுவருவதால் முதல்–அமைச்சருடன் இருப்பவர் பலன் பெறுவார். ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்தான் இந்த தேர்தல். இளைஞருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தேர்வு செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் உள்ள இளமையான உறுப்பினராக இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், அன்பழகன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ரங்கசாமி நேற்றுகாலை பெரியகாலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கருவடிக்குப்பம், நாவற்குளம் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.