தேனி, ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம்


தேனி, ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2019 10:30 PM GMT (Updated: 1 April 2019 10:30 PM GMT)

தேனி, ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை,

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தேனி என்பது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கோட்டை. எனவே தான் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட தேனி அதிக வளர்ச்சி அடைந்து இருக்கிறது. சுகாதார வசதியில் முன்னோடியாக சென்னையில் இருப்பது போல தரமான மிகப்பெரிய அரசு ஆஸ்பத்திரி இங்கு உள்ளது. இந்த ஆஸ்பத்திரி மூலம் சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் பயன் அடைந்து வருகின்றனர்.

அதே போல் அனைத்து நிலங்களும் பாசன வசதி பெற வேண்டும் என்பதற்காக கடைக்கோடி வரை வாய்க்கால் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தேனியில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்த வளர்ச்சி தொடர பொது மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.

அரசின் சாதனைகளை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால் தி.மு.க.வால் அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்த சாதனைகளை சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்களது ஆட்சியில் மக்களுக்கு வெறும் சோதனைகள் தான். ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக கூறி ஸ்டாலின் அதன் மூலம் ஓட்டு வாங்க நினைக்கிறார். பொய் வழக்கு போட்டு அதன் மூலம் ஜெயலலிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு தி.மு.க. தான் முக்கிய காரணம் ஆகும். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அ.தி.மு.க.வுக்கு தினகரன் துரோகம் செய்வார் என்பதனை முன்கூட்டியே கணித்து தான் ஜெயலலிதா அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story