எதிர்க்கட்சிகள் மீது அதிகார துஷ்பிரயோகம் சி.பி.ஐ. சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை மத்திய அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
சி.பி.ஐ. சோதனை நடத்தி எதிர்க்கட்சிகளை பழிவாங்க மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து வெண்ணிலா நகர் பகுதியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். அவருடன் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காங்கிரசுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பா.ஜ.க., அ.தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். தோல்வி பயத்தால் திட்டமிட்டு எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நோக்கில் சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு அதிகாரிகளை அனுப்பி மத்திய அரசு சோதனை நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
புதுவையில் 2011–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. 5 ஆண்டுகளில் புதுவையை குட்டிச் சுவர் ஆக்கியவர் தான் ரங்கசாமி. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் ரூ.1,850 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிநீர் திட்டத்திற்கு ரூ.500 கோடியும், ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.1,200 கோடியில் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவும் கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.200 கோடி மத்திய அரசிடம் போராடி பெற்றுள்ளோம்.
புதுவை அரசு பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றுள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். புதுவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கம் வெற்றி பெற்று மத்திய மந்திரியாவது உறுதி. புதுவை மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.