பக்தர்கள் வசதிக்காக காடுகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


பக்தர்கள் வசதிக்காக காடுகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 2 April 2019 10:50 PM GMT (Updated: 2 April 2019 10:50 PM GMT)

‘‘பக்தர்களின் வசதிக்காக, காடுகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை,

சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பக்தர்களின் வசதிக்காக வனப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதை அனுமதிக்க முடியாது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘மாதத்தில் 4 நாள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ‘‘குடிநீர் என்பது பக்தர்களுக்கும், வன உயிரினங்களும் இன்றியமையாதது தான். இதற்காக காடுகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் சதுரகிரி மலைப்பகுதியில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை சமாளிக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 12–ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story