வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.5½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.5½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை பெரியார்காலனி சாமிநாதபுரத்தை சேர்ந்த விஜய், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த நரேஷ் (32) மற்றும் மலேசியாவை சேர்ந்த அருள் என்ற ஆறுமுகம் ஆகிய 3 பேரும் வாங்கியுள்ளனர்.

இதுபோல் சின்னக்கரையை சேர்ந்த ராஜேசிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரமும், ராக்கியாபாளையத்தை சேர்ந்த ரகுபதியிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரமும் நரேஷ் உள்பட 3 பேரும் வாங்கியுள்ளனர். இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட தேதியில் 3 பேருக்கும் வேலை வாங்கிக்கொடுக்கப்படவில்லை.

இது குறித்து நரேஷ் உள்பட 3 பேரையும் தொடர்புகொண்டு அவர்கள் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். பணத்தை திருப்பிக்கேட்ட போதும் கொடுக்கவில்லை. இதனால் ரமேஷ் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் மோசடி செய்த நரேசை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று கைது செய்தார். மேலும், இதில் தொடர்புடைய விஜய், ஆறுமுகம் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story