தீர்ப்பு நகலை தூக்கி வீசுவதா? ‘போலீஸ் துணை சூப்பிரண்டை கைது செய்து ஆஜர்படுத்துங்கள்’ கோர்ட்டு அதிரடி


தீர்ப்பு நகலை தூக்கி வீசுவதா? ‘போலீஸ் துணை சூப்பிரண்டை கைது செய்து ஆஜர்படுத்துங்கள்’ கோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 4 April 2019 4:30 AM IST (Updated: 4 April 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

தீர்ப்பு நகலை தூக்கி வீசியதாக எழுந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக துணை போலீஸ் சூப்பிரண்டு, சப்–இன்ஸ்பெக்டரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே கட்டையன்வலசை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அங்குள்ள தனது தந்தை வழி சொத்துகளை அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த வெள்ளைச்சாமி உள்ளிட்ட 6 பேர் போலி பட்டா தயாரித்து அந்த சொத்துகளை அவர்களது பெயருக்கு மாற்றிக்கொண்டனராம்.

இதுபற்றி அறிந்த பொன்னுச்சாமி ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 11.1.2019–ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி பொன்னுச்சாமியின் சொத்துகளை போலி பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்தது செல்லாது எனவும், அந்த சொத்துகளை பொன்னுச்சாமி தொடர்ந்து அனுபவிக்கவும் தீர்ப்பு கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொன்னுச்சாமி தனக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த சென்றார். அதற்கு வெள்ளைச்சாமி தரப்பினர் தடுத்ததால் இது குறித்து கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், திருப்புல்லாணி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோரிடம் பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.

தனது நிலத்தை மீட்டுத்தருமாறு பொன்னுச்சாமி புகார் செய்ததுடன் கோர்ட்டு தீர்ப்பின் நகலை அவர்களிடம் அளித்தாராம். அப்போது போலீஸ் அதிகாரிகள் தீர்ப்பின் நகலை பொன்னுச்சாமியின் முன்னிலையில் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவை போலீசார் அவமதித்ததாக பொன்னுச்சாமி அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், வருகிற 11–ந் தேதிக்குள் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.


Next Story