58 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் ‘வேளாண்மையை தேசிய தொழிலாக மாற்றுவோம்’ திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு


58 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் ‘வேளாண்மையை தேசிய தொழிலாக மாற்றுவோம்’ திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

58 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், வேளாண்மையை தேசிய தொழிலாக மாற்றுவோம் என்றும் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

திண்டுக்கல்,

நாம் தமிழர் கட்சி சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று இரவு பொதுக் கூட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மன்சூர் அலிகான், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சங்கிலிபாண்டி ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் போது, நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. மக்களின் மீது நாம் தமிழர் கட்சிக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்கு காரணம்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை அவர்கள் தீர்மானிக்க முடிவதில்லை. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் விளைபொருட்களுக்கான விலையை விவசாயிகளே தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வேளாண்மையை தேசிய தொழிலாக மாற்றி அதில் ஈடுபடுபவர்களை அரசு பணியாளர்களாக மாற்றுவோம்.

அரசு பணியாளர்களுக்கு 58 வயதில் ஓய்வூதியம் கிடைப்பது போல் விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். வேப்ப மரத்தின் காப்புரிமையை ஜெர்மனி எடுத்துச்சென்றது. நம்மாழ்வார் இல்லையென்றால் நமக்கு அந்த உரிமை கிடைத்திருக்காது. மலைகள் உடைக்கப்பட்டு கல்குவாரிகளாக மாற்றப்பட்டு வருகிறது. மலைகள் இல்லையென்றால் நமக்கு மழை எப்படி கிடைக்கும்?.

தாய் மண்ணின் கண்ணீர்

இதேபோல் ஆற்று மணலை லாரிகளில் அள்ளிச்செல்கின்றனர். கனிம வளம் நம் கண்முன்பே பறிபோவதை நம்மால் தடுக்க முடியவில்லை. ஆற்றுமணலை லாரியில் அள்ளிச்செல்லும் போது அதில் இருந்து சொட்டு, சொட்டாக விழுவது தண்ணீர் அல்ல. நம் தாய் மண் சிந்துகிற கண்ணீர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இயற்கை வளங்களை காசாக்கி குவிப்பவர்கள் தான் மறுபடியும், மறுபடியும் அதிகாரம் கேட்டு வருகின்றனர். அவர்களை விடுத்து நாம் தமிழர் கட்சிக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தால் கனிம வளம் பறிபோவது தடுக்கப்படும். விடுதலை பெற்ற இந்தியாவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தது காங்கிரஸ் தான். இதுவரை செய்யாததை அடுத்த 5 ஆண்டுகளில் செய்வார்கள் என்று எப்படி நம்புவது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி சொல்கிறார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று, ஆனால் அதனை கொண்டு வந்தவர் கள் யார்? இவர்கள் தான்.

தற்போது 5 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்தது பிரதமர் மோடி தான். அப்போது செய்யாத ஒன்றை அடுத்த 5 ஆண்டுகளில் எப்படி செய்வார்?. ரபேல் போர் விமானம் வாங்கியதற்கான ஆவணங்கள் எங்கே? என்று கேட்டால் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்தே அந்த ஆவணங்கள் திருடு போனது என்கிறார்கள். இதற்கு பெயர் பாதுகாப்பு அமைச்சகமா? ஆவணத்தை பாதுகாக்க முடியாத இவர்கள், நாட்டை எவ்வாறு பாதுகாப்பார்கள்?.

18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையில் ஒரு கட்சி இருந்ததென்றால் அது தி.மு.க. தான். அப்போது எதுவும் செய்யாதவர்கள், இந்த தேர்தலில் வென்று என்ன செய்யப்போகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 37 இடங்கள் கிடைத்தது. அவர்கள் சாதிக்காத ஒன்றை தற்போதைய தேர்தலில் வென்று அ.தி.மு.க. என்ன செய்யப்போகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உலக தரத்தில் கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். குடிநீர் இலவசமாக வழங்குவோம். ஆனால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ, பா.ஜ.க.வோ, காங்கிரசோ இதனை அறிவிக்குமா? அறிவிக்காது. ஏனென்றால் தனியாரிடம் கல்வியையும், மருத்துவத்தையும் விற்றதே இவர் கள் தான். எனவே மக்களே சிந்தித்து வாக்களியுங்கள், வாக்களிக்க பணம் பெறாதீர் கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story