ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்


ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்
x
தினத்தந்தி 4 April 2019 11:15 PM GMT (Updated: 4 April 2019 8:14 PM GMT)

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

ஈரோடு, 

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்த அவர், நேற்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்தும், அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தும் பேசினார்.

இதற்கான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு-அவல்பூந்துறைரோடு ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் நடந்தது. முன்னதாக, பொள்ளாச்சியில் இருந்து கார் மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வந்தார். அவருக்கு வேட்பாளர் அ.கணேசமூர்த்தி மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு சக்தி சுகர்ஸ் விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்த அவர், அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.20 மணிஅளவில் பிரசார வேனில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது பொதுக்கூட்ட மைதானத்தில் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

மேடையில் ஒரு ஓரத்தில் இருந்து மறுஓரம் வரை நடந்து வந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் பேசிய அவர், பேசி முடித்ததும் மேடையின் முன்னால் அமைக்கப் பட்டு இருந்த நடை தளத்தில் 200 அடி தூரம் நடந்து சென்று தொண்டர்கள், பொதுமக்களுக்கு கைகள் கொடுத்து உற்சாகப்படுத்தி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி ஆகியோர் இருந்தனர்.

கூட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், மாநில இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், கொள்கைபரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், சின்னையன், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி.ராஜா, அந்தியூர் செல்வராஜ், செந்தில்பாலாஜி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, மக்கள் ஜி.ராஜன், கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரகுராமன், துரைராஜ், மாரிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொங்கு கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நா.விநாயகமூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் லாரன்ஸ், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், பெரியார் திராவிடர் கழக செயலாளர் குமரகுருபரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆரிப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக், அகில இந்திய பார்வர்டு கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டம் முடிந்த பிறகு மு.க.ஸ்டாலின் கரூருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

Next Story