பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரத்தின்போது பாட்டில் வீசிய சம்பவத்தில் 2 வாலிபர்கள் கைது
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரத்தின்போது பாட்டில் வீசிய சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார்நாகேந்திரன் கடந்த 1–ந் தேதி பெரியபட்டினம் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் சென்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களின் பிரசார வாகனத்தின் மீது திடீரென்று கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து வீசப்பட்ட சோடா பாட்டில் பிரசாரத்தில் கலந்துகொண்ட திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் உடையதேவன்(வயது55) என்பவர் தலையில் விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பிரசாரத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் செல்போன்களில் எடுக்கப்பட்ட பதிவுகள் போன்றவற்றை வைத்து தொழில்நுட்ப அடிப்படையில் துல்லியமாக கண்காணித்து அதன்மூலம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த காட்சிகளின் அடிப்படையில் பிரசாரத்தின்போது சாலையின் மறுபுறம் இருந்து பாட்டில் வீசப்பட்டதும், அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்டு இருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சோடா பாட்டில் வீசியது பெரியபட்டிணம் நடுத்தெரு சுலைமான் மகன் செய்யது பாதுஷா(33), சாகுல் மகன் ரிபாஸ்கான்(22) என்பதும் இருவரும் ஆட்டோ டிரைவர்கள் என்பதும் கட்சி மீதான எதிர்ப்பை தெரிவிக்க இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதன்அடிப்படையில் திருப்புல்லாணி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், 2 பேரையும் கைது செய்தார். அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரத்தின்போது சோடாபாட்டில் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.