“தேர்தலிலும், அரசியலிலும் மாற்றம் தேவை” விருதுநகர் பிரசாரத்தில் சீமான் வலியுறுத்தல்
தேர்தலிலும், அரசியலிலும் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தியே தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் அருண்மொழிதேவனை ஆதரித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் மின்வாரியம் அலுவலகம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:–
அரசியல் என்பது நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது தவறான நடைமுறையாகும். அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கினாலும் எந்தவகையிலாவது அரசியல் நம்மை விடாமல் தொடரும். அரசியலிலும், தேர்தலிலும் மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாங்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. ஓட்டுக்கு பணம்பெற்றுக்கொண்டு நாட்டை விற்றுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான் வருகிறோம்.
கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது ஒரு கிலோ அரிசி ரூ.2–க்கு கொடுத்தார். ஐந்தாண்டுகள் கழித்து ஒரு கிலோ அரிசி ரூ.1–க்கு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதுதான் வளர்ச்சியா?. வளர்ச்சியில்லை, இது வறுமையின் வளர்ச்சியாகும். இதுவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்ன செய்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வோம், இதை செய்வோம் என்று கூற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதனை சொல்வதற்கு தகுதி உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். இலவச கல்வி, இலவச தரமான மருத்துவம் வழங்குவோம். முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும். தரமான அரசு மருத்துவமனைகள் இருந்தால் மருந்துகள் வாங்குவது குறையும். தரமான மருந்துகள் வழங்கப்பட்டால் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் குறையும்.
பிரதமர் மோடி ஏழை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்குவேன் என்று கூறுகிறார். தமிழக அரசு ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவோம் என்று கூறுகிறது. ராகுல்காந்தி ஏழைகளுக்கு வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று கூறுகிறார். இது யார் பணம். ஏழைமக்களின் பணம்தானே. கிராமப்புற பெரியவரிடம் பேசியபோது, இந்த சின்னத்துகாரன் ரூ.3 ஆயிரம் கொடுத்தான் அந்த சின்னத்துகாரன் ரூ.2 ஆயிரம் கொடுத்தான், மற்றொரு சின்னத்துகாரன் ரூ.1000 கொடுத்தான். வீட்டில் 5 ஓட்டு இருக்கிறது. இவனுக்கு ரெண்டு, அவனுக்கு ரெண்டு, மற்றொருவனுக்கு ஒன்று என ஓட்டு போட்டு விடுவேன் என்று கூறினார். வறுமையிலும் வாக்கு மாறாத பெரியவர். ஆனால் அரசியல் கட்சிகள் எந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றி இருக்கிறதா? வாக்குறுதி அளிக்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஆளுங்கட்சிகளால் தேர்தலில் போட்டியிட முடியுமா? ஓட்டுக்கு பணம் வாங்குவது தேச துரோக செயலாகும்.
பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தொழிற்சாலைகளை தொடங்கிவிட்டு உணவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தொடங்கிவிட்டன. இன்று நாம் காரை இறக்குமதி செய்கிறோம். சோற்றையும், நீரையும் ஏற்றுமதி செய்கிறோம். விவசாயம் செய்வதை மறந்து விட்டால் சாப்பிட சோற்றுக்கு எங்கே போவது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை யுக்திகளை யாரும் பயன்படுத்துவதில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்வோம், கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம் என அரசியல் கட்சியினர் அறிக்கை விடுகின்றனர். அவர்களை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளியது யார். அதற்கு பொறுப்பு அரசியல் கட்சிகள் தானே.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது வரலாற்று கடமை. தமிழகத்தில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விவசாயியுடன் கரும்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.