விபத்தில் பலியான உறவினர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி தீக்குளிக்க முயன்ற சிற்பி கைது


விபத்தில் பலியான உறவினர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி தீக்குளிக்க முயன்ற சிற்பி கைது
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் விபத்தில் பலியான உறவினரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி தீக்குளிக்க முயன்ற சிற்பியை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்கா தோப்புத்தெருவை சேர்ந்த பாலு மகன் புருஷோத்தமன்(வயது 30). சிற்பி. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(45). கொத்தனார். சம்பவத்தன்று ரமேஷ், தனது வீட்டின் கட்டிட பணிக்கு மணல் கிடைக்காததால் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி கிராமத்தில் தான் கட்டிட பணி செய்த இடத்தில் இருந்து ஒரு சாக்கு மூட்டை மணலை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சீர்காழியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

புத்தூர் மதகடி அருகே வந்தபோது ஒரு தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை விபத்தில் உயிரிழந்த ரமேசின் உறவினர் புருஷோத்தமன் என்பவர் பெட்ரோல் கேனுடன் சீர்காழி அரசு மருத்துவமனை முன்பு தமிழக அரசு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும். உயிரிழந்த ரமேசின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூச்சலிட்டு தீக்குளிக்க முயன்றார். அவரை சீர்காழி போலீசார் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீக்குளிக்க முயன்ற புருஷோத்தமனை கைது செய்தனர்.

அரசு மருத்துவமனை முன்பு சிற்பி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story