பெரம்பூரில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்


பெரம்பூரில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 7 April 2019 4:45 AM IST (Updated: 7 April 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பெரம்பூரில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

சென்னை,

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பெரம்பூர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பழனி ஆண்டவர் கோவில் தெரு, சுந்தரம் தெரு, மெக்சின்புரம், ஜெ.ஜெ.நகர், ஜி.எஸ்.டி. சாலை, எம்.ஆர்.நகர், ஆர்.கே.நகர் (மேற்கு), மூலகொத்தளம் பகுதிகளில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

5 ஆண்டு கால ஆட்சியில் நாடு நாடாக சுற்றுவதையே வேலையாக கொண்ட ஒரு பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான். மக்களை சந்திக்க மறந்துவிட்ட அவர், தற்போது தேர்தல் என்றதும் ஓடோடி வருகிறார். மோடியின் கைப்பாவையாக இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நமக்கு வேண்டாம்.

இன்று வரை ஜெயலலிதா மரணத்துக்கு என்ன காரணம்? என்றே தெரியவில்லை ஒரு கட்சியின் தலைவரையே (ஜெயலலிதா) காப்பாற்ற முடியாதவர்கள் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற முடியும்.

இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் வென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, முதல்-அமைச்சராக்க வேண்டும். அதேபோல நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்தி ராகுல்காந்தியை பிரதமராக்கிட வேண்டும். அது மக்களால் மட்டுமே முடியும்.

‘சொல்வதை செய்வோம், செய்வதையே சொல்வோம்’, என்ற தி.மு.க.வின் தாரக மந்திரத்துக்கேற்ப, தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story