வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்


வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

வாக்காளர்கள் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான வருகிற 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். வாக்காளர்களாக பதிவு செய்து உள்ள அனைவரும் தங்கள் பகுதி வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இடம் பெற்று உள்ள தொகுதி எண், பாகத்தின் எண், பாகத்தின் பெயர், தொடர் எண் மற்றும் வாக்குச்சாவடியின் பெயர், ஆகிய விவரங்களுடன் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் புகைப்படச் சீட்டு சம்பந்தப்பட்ட பகுதி வாக்குச்சாவடி அலுவலரால் வழங்கப் படும்.

இதனை வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்த இயலும். வாக்குச்சாவடிகளில் அடையாள சான்றாக பயன்படுத்த இயலாது. வாக்குச்சாவடிகளில் அடையாள சான்றாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், பணியாளர் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசுகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் வழங்கப்பட்டது), வங்கி, தபால் அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகங்கள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

மேலும் ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது), ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), அலுவலக அடையாள அட்டை (நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது), ஆதார் அட்டை ஆகிய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் வாக்காளர்கள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்து ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story