குமரிக்கு ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்கள் கொண்டு வந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்


குமரிக்கு ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்கள் கொண்டு வந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை கொண்டு வந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நாகர்கோவில்,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் நேற்று இரவு பிரசாரம் செய்தார்.

அதாவது நாகர்கோவில் வடசேரி சந்திப்பு, தக்கலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தக்கலையில் நடந்த பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது கூறியதாவது:-

எங்களது கூட்டணி மெகா கூட்டணி. எங்கள் கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளில் குமரி மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பதில் நிறைவான கடமை புரிந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். குமரி மாவட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இங்கு பிரமாண்ட பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. தேர்தலை பொறுத்த வரை மக்கள் தான் எஜமான்கள். எனவே நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

மத்தியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சி செய்தன. அப்போது பல லட்சம் கோடி ரூபாய் வரியாக மத்திய அரசுக்கு சென்றது. ஆனாலும் இந்த 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. நாட்டில் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்த கூட்டணி வரலாற்று பிழை ஒன்றை செய்தது. அதாவது சேது சமுத்திர திட்டம் வேண்டாம் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் அதை கேட்காமல் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. 40 ஆயிரம் கோடி ரூபாயை வீணாக்கியது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் ஜீவாதார உரிமை கேள்விக்குறியாக இருந்தது. அந்த சமயத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தும் எதையும் செய்யவில்லை. 2013-ம் ஆண்டு காவிரி மன்ற இறுதி தீர்ப்பை ஜெயலலிதா போராடி பெற்றுத் தந்தார். 2009-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க.வும் நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுத்திருக்கலாம்.

தி.மு.க. தனது ஆட்சியில் எந்த தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் ஏராளமான தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்படும். பருவமழை இல்லாததாலும், வறட்சியாலும் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் தொடங்கியதும் தி.மு.க.வினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து திட்டத்தை தடுத்து நிறுத்திவிட்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் 60 லட்சம் மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த வித சாதி, மத பிரச்சினைகளும் ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அ.தி.மு.க. ஒரு ஆலமரம். அதில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் ஆலமரத்தின் வேர் போன்றவர்கள். பூகம்பம், புயல் எது வந்தாலும் அந்த ஆலமரத்தை அழிக்க முடியாது. அ.தி.மு.க.வை அழிக்க மு.க.ஸ்டாலினால் முடியவே முடியாது. மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக சென்றார். சைக்கிள் ஓட்டினார். ஆட்டோ ஓட்டினார். டீ கடையில் டீ குடித்தார். பல்வேறு வேஷங்களை போட்டார். ஆனால் மு.க.ஸ்டாலின் தந்திரம் நம்மிடம் பழிக்காது. எனவே தாமரைக்கு வாக்குகளை அளித்து பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், வைகை செல்வம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜான்தங்கம் (மேற்கு) மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். 
1 More update

Next Story