திருப்பரங்குன்றம் அருகே பெண் எரித்துக் கொலை?
திருப்பரங்குன்றம் அருகே இளம்பெண தீயில் கருகி இறந்துபோனார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் முத்துராமன் (வயது 38), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா(35). இவர்களுக்கு யோகராஜ்(10), வேல்ராஜ்(8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சமீப காலமாகவே கணவன்–மனைவி இடையே குடும்ப தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று சத்தியா தீயில் உடல் கருகிய நிலையில் வீட்டிற்குள் பிணமாக கிடந்துள்ளார். இதேவேளையில் முத்துராமனும் தீக்காயத்துடன் இருந்து உள்ளார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சத்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்த ராமனை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக முத்துராமனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிலிண்டர் பற்றவைக்கும்போது சத்தியா மீது தீப்பிடித்து எரிந்தது. இதனால் சத்தியாவை காப்பாற்ற போராடினேன். ஆனால் முடியாத நிலையில் தனது மனைவி இறந்துவிட்டார். தீயுடன் போராடியதால் தனக்கும் தீக்காயம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
இதேவேளையில் முத்துராமன், அவரது மனைவி சத்தியாவை அடித்து துன்புறுத்தியதோடு, அவரது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து கொன்றுவிட்டதாக உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சத்தியா எரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.