ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் ரூ.1 லட்சம்–நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நூதனமுறையில் ரூ. 1 லட்சம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மணலி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 71). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மகள், மருமகனுடன் மணலியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 28–ந்தேதி பிரகாசம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு காரில் காவி வேட்டி கட்டியிருந்த 4 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் பிரகாசத்திடம் உங்கள் வீட்டில் அபூர்வ சக்தி இருப்பதாக கூறி நூதன முறையில் வீட்டில் இருந்த 1 பவுன் தங்க மோதிரம், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பிரகாசம் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்–இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பிரகாசத்தை ஏமாற்றி பணம், நகையை கொள்ளையடித்து சென்ற 4 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.