பெரம்பலூர், அரியலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி


பெரம்பலூர், அரியலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 8 April 2019 4:30 AM IST (Updated: 8 April 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

அரியலூர்,

வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஏற்கனவே கடந்த 24-ந் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று 2-வது கட்டமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 332 வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பெரம்பலூர் உதவி தேர்தல் அதிகாரி விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. அதேபோல குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 320 வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பு ஆலத்தூர் தாலுகா மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் குன்னம் உதவி தேர்தல் அதிகாரி மஞ்சுளா தலைமையில் நடந்தது.

மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும், வாக்குச்சாவடி முதல் நிலை அலுவலர்களுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை இயக்குவது தொடர்பாகவும், மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது போன்ற அடிப்படையான பணிகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பொறுப்பு மற்றும் கடமை பற்றியும், தேர்தலின் போது அனைத்து அலுவலர்களும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி பார்வையிட்டார்.

இதேபோல் பெரம்பலூர், மேலமாத்தூரில் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

இதேபோல் சிதம்பரம் தனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 297 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 1,445 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 290 வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றவுள்ள 1,409 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பினை அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, தாசில்தார் குமரய்யா, மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story