ரவுடி கொலை வழக்கில் கைதான 6 பேருக்கு 6 மாதம் சிறை ஈரோடு ஆர்.டி.ஓ. உத்தரவு


ரவுடி கொலை வழக்கில் கைதான 6 பேருக்கு 6 மாதம் சிறை ஈரோடு ஆர்.டி.ஓ. உத்தரவு
x
தினத்தந்தி 7 April 2019 10:45 PM GMT (Updated: 7 April 2019 8:05 PM GMT)

ரவுடி கொலை வழக்கில் கைதான 6 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் உத்தரவிட்டார்.

ஈரோடு,

ஈரோடு அசோகபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் பிரகலாதன் (வயது 30). ரவுடியான இவர் கடந்த மாதம் 29–ந் தேதி கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு அருகில் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கடந்த 1–ந் தேதி குணசேகரன், கலைச்செல்வன், கவுதம், பாலமுருகன் என்ற இப்ராகிம், வெண்டிபாளையம் குமார் ஆகியோர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இவர்களை கருங்கல்பாளையம் போலீசார் கடந்த 4–ந் தேதி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் 5–ந் தேதி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கொலைக்கு திட்டம் தீட்டியதாக முனியப்பன் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 6 பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவர்கள் கொலை சம்பவம் நடந்த 10 நாட்களுக்கு முன்பு நன்னடத்தை அடிப்படையில் ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் 6 பேரும் சட்டவிரோத செயலில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்ததால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நன்னடத்தை விதியை மீறி கொலை சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், ஆர்.டி.ஓ. முருகேசனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் குணசேகரன், கலைச்செல்வன், கவுதம், பாலமுருகன் என்கிற இப்ராகிம், வெண்டிபாளையம் குமார், முனியப்பன் ஆகிய 6 பேருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவர்கள் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மேலும், ஆர்.டி.ஓ. உத்தரவிட்டு இருப்பதால் 6 மாதம் வரை அவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story