மத்திய, மாநில ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் ராமநாதபுரத்தில் சீமான் பேச்சு
முதலாளிகளின் முகவர்களாக, தரகர்களாக உள்ள மத்திய, மாநில ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேசுவரி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஹேமலதா ஆகியோரை ஆதரித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:– இந்த தேர்தலில் மத சார்பற்ற கூட்டணியும், மதவாத கூட்டணிகள் போட்டியிடுவதாக கூறுகிறார்கள். அனைவரும் மனிதர்கள் தான். சாதி, மதம் இடையே வந்தது. சாதிகளை கூறி தமிழர்களை பிரித்து வைத்துள்ளனர். அதன் காரணமாக ராமநாதபுரம் தொகுதியில் இந்துவா? முஸ்லிமா? என்ற பதற்றமான நிலையை உருவாக்கி உள்ளனர்.
ராமசேத்திரமான ராமநாதபுரம் தண்ணீர் இல்லாத பஞ்ச பூமியாக உள்ளது. இங்குள்ள பெண்கள் தண்ணீருக்காக கற்கால மனிதர்களை விட கஷ்டப்படுகின்றனர். சில தலைமுறைகளுக்கு முன்பு நம்மில் இருந்து மதம் மாறியவர்கள் தான் முஸ்லிம்கள். வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. இங்குள்ள சாதிய வேற்றுமை தான் இதற்கு காரணம். தமிழை ஆட்சி மொழியாக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியவர் காயிதேமில்லத் என்பதை மறந்து விடக்கூடாது.
காங்கிரஸ் தமிழினத்தின் எதிரி. பா.ஜ.க. மனித குலத்தின் எதிரி. பதவிக்காக எதையும் செய்யக் கூடிய அ.தி.மு.க., தி.மு.க., ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ளனர். கச்சத்தீவு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எல்லாவற்றிலும் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கை தான் உள்ளது. வேறுபாடு இல்லை. மதம், சாதியை கடந்து தமிழர் என்ற உணர்வில் ஒன்றுபட வேண்டும். பாகிஸ்தான் இல்லாவிட்டால் பா.ஜ.க. விற்கு அரசியலே இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த நல்ல திட்டத்தினையும் செயல்படுத்தவில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்கள் தான் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்தியாவை பாதுகாக்க மோடி தேவையில்லை. மோடியிடம் இருந்து தான் இந்தியாவை பாதுகாக்க வேண்டும். அய்யப்பன் கோவில் பிரச்சினையை உருவாக்கிய பா.ஜ.க. தான் தற்போது அதை எதிர்த்து போராடுகிறது.
இஸ்லாமியர்கள் உரிமைக்காக நாம் தமிழர் கட்சி எப்போதும் உடன் நிற்கும். 2020–க்கு பின் நிலத்தடி நீரே இல்லாத நிலை ஏற்படும். நீரை சேமித்து பாதுகாத்து திட்டத்தினை பல நாடுகள் செயல்படுத்தி விட்டன. ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் முதலாளிகளின் முகவர்களாகவும், தரகர்களாகவும் உள்ளனர். முதலாளிகளின் முகவர்களாக, தரகர்களாக உள்ள மத்திய, மாநில ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்.
நீர் மேலாண்மை, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை அரசு பணியாக்கி நாடு முழுவதும் வேளாண் பண்ணைகளை உருவாக்கி அனைவருக்கும் வேலை£வாய்ப்பு கொடுப்போம். தி.மு.க., அ.தி.மு.க.வில் ஒரு முஸ்லிமுக்குகூட சீட்டு கொடுக்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு மட்டும் ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி 5 இடங்களில் முஸ்லிம்களை நிறுத்தியுள்ளது. எனவே அனைவரும் எங்களை ஆதரிக்க வேண்டும். பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் செய்ய முடியும், தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலையை மாற்ற நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.