சென்னையின் தண்ணீர் தேவையை தீர்க்கும் ஏரிகள் வறண்டு வருவதால் கால்வாய் வெட்டி குடிநீர் எடுக்கும் பணி தீவிரம்


சென்னையின் தண்ணீர் தேவையை தீர்க்கும் ஏரிகள் வறண்டு வருவதால் கால்வாய் வெட்டி குடிநீர் எடுக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 April 2019 4:00 AM IST (Updated: 8 April 2019 10:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகள் வறண்டு விடும் நிலையில் உள்ளன. இதனால் கால்வாய் வெட்டி தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மாறாக வீராணம் ஏரி கைகொடுத்து வருகிறது.

சென்னை,

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஏரிகளுக்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை.

இதனால் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் அளவில் ஏரிகளில் தண்ணீர் இல்லை. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் ஆங்காங்கே தேங்கி கிடந்த தண்ணீரை வாய்க்கால் வெட்டி, பொதுவான இடத்துக்கு கொண்டு வந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சேரும்-சகதியுமாக தண்ணீர் வந்ததால் கடந்த வாரம் முதல் தண்ணீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சோழவரம் ஏரியிலும், ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீர் வாய்க்கால் வெட்டி பொதுவான ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தண்ணீர் எடுக்கும் பகுதியில் தண்ணீர் மட்டம் குறையும்போதும், மோட்டார்களில் உள்ள குழாய்களில் சிக்கும் மீன்கள் செத்து கரை பகுதிகளில் மிதக்கின்றன. இதனை உண்பதற்காக கடல் காளை பறவைகள் (சீகல்) அதிக அளவு அப்பகுதியில் வட்டமிடுவதை காண முடிகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளான பூண்டியில் 317 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 38, புழல் 277, செம்பரம்பாக்கத்தில் 8 மில்லியன் கன அடி உள்பட மொத்தம் 640 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4.45 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. குறிப்பாக செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

தற்போது சோழவரம் ஏரியில் 38 மில்லியன் கன அடி தண்ணீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. கால்வாய் வெட்டி தண்ணீரை ஒரே பகுதிக்கு கொண்டு வந்து மோட்டார்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் எடுத்து வருகிறோம். ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மட்டுமே இதுபோன்று தண்ணீர் எடுக்க முடியும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதேபோல தான் செம்பரம்பாக்கம் ஏரியிலும் கால்வாய் வெட்டி தண்ணீர் எடுத்தோம். மீதம் உள்ள 2 ஏரிகளும் வறண்டு விடும் நிலையில் உள்ளன.

ஏரிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் இருந்து மாநகரின் குடிநீர் தேவைக்காக 147 கன அடி மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த வீராணம் ஏரி தற்போது சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு கைகொடுத்து வருகிறது. குறிப்பாக இங்கிருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் நீரும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 200 மில்லியன் லிட்டர் நீரும், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 80 மில்லியன் லிட்டர் வீதமும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

குடிநீர் என்றாலே ஏரிகளில் இருந்து எடுத்து வினியோகிப்பது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது ஏரிகளை முழுமையாக நம்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடாக வீராணம் ஏரி நமக்கு முழு அளவில் கை கொடுக்கிறது. தேவைப்பட்டால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்புசெட்டுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story