பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை


பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 9 April 2019 10:45 PM GMT (Updated: 9 April 2019 7:32 PM GMT)

பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருமருகல் அருகே கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கங்களாஞ்சேரி, தென்கரை, விற்குடி, வாழ்குடி, காரையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1096 பேர் 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்திருந்தனர். இதில் கடந்த மாதம் 758 விவசாயிகளுக்கு மட்டும் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு கங்களாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சரக வருவாய் அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story