கம்பம்மெட்டு வனப்பகுதியில் காட்டுத்தீ விடிய விடிய போராடி வனத்துறையினர் அணைத்தனர்
கம்பம்மெட்டு வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் விடிய விடிய போராடி அணைத்தனர்.
கம்பம்,
கம்பம் மேற்கு வனச்சரகத்தில் உள்ள கம்பம்மெட்டு மற்றும் கம்பம் வனப்பகுதியில் வெயில் காரணமாக மரம், செடி, கொடிகள் கருகி வருகின்றன. இதனால் வனப்பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு கம்பம்மெட்டு மலைப்பாதை 4 கொண்டை ஊசி வளைவு பகுதியில் காட்டுத் தீப்பிடித்தது.
செடி, கொடி, மரங்கள் மளமளவென பற்றி எரிந்ததால் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காட்டுத்தீயால் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
நேற்று காலை வரை விடிய விடிய போராடி வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அங்குள்ள ஏராளமான செடி, கொடி, மரங்கள் எரிந்து நாசமானது. தீயை முழுமையாக அணைத்த பிறகு கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தால் விலை உயர்ந்த மரங்கள் மற்றும் வன விலங்குகளும் பாதிப்படைகின்றன. மேலும் கம்பம் மேற்கு வனச்சரகத்தில் பல மாதங்களாக வனச்சரகர் பணியிடம் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தீத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘மலைப்பகுதியில் உள்ள மரங்களின் இலைகள் உதிர்ந்து, செடி, கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. இதனால் வெயில் காரணமாக மரங்கள் ஒன்றொடொன்று உரசும்போது தீப்பிடிக்கின்றன. மேலும் வனப்பகுதியில் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகிறோம்’ என்றனர்.
Related Tags :
Next Story