பவானிசாகர் அருகே யானைகள் அட்டகாசம்; வாழைகள் நாசம் விவசாயிகள் வேதனை
பவானிசாகர் அருகே யானைகள் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசம் அடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனைப்பட்டார்கள்.
பவானிசாகர்,
பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது.
இதனால் யானைகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி காட்டை விட்டு இரவு நேரத்தில் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. மேலும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கின்றன.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 3 யானைகள் காட்டை விட்டு வெளியேறி பவானிசாகர் போலீஸ் குடியிருப்புக்கு எதிர்புறம் உள்ள அப்புசாமி (வயது 53) என்பவருடைய தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.
காவலுக்கு தோட்டத்தில் இருந்த அப்புசாமி யானைகளை கண்டதும் உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முயன்றனர்.
ஆனாலும் யானைகள் தோட்டத்தில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து வாழைகளை சேதப்படுத்திக்கொண்டு இருந்தன. வனத்துறையினரும் விவசாயிகளுடன் சேர்ந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இந்தநிலையில் அதிகாலை 5 மணி அளவில் 3 யானைகளும் காட்டுக்குள் சென்றன. யானைகள் புகுந்ததால் அறுவடைக்கு தயார் நிலையில் குலைதள்ளியிருந்த ஏராளமான வாழைகள் நாசமாகிவிட்டன.
அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியேறி தோட்டங்களுக்குள் புகுந்த பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது என்று வேதனையுடன் தெரிவித்த அந்த பகுதி விவசாயிகள் இழப்புக்கு வனத்துறையினர் உரிய நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.