விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு,
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஈரோட்டில் பிரசாரம் செய்ய இருந்தார். இந்த நிலையில் அவரது பிரசார தேதி மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 15–ந் தேதி அவர் ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இந்த நிலையில் முதல்–அமைச்சர் பிரசாரம் செய்ய உள்ள ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் சூளை பகுதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை எங்களுக்கு வெற்றி நிர்ணயம் ஆகிவிட்டது. முதல்–அமைச்சர் இதுவரை 34 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். அனைத்து தொகுதிகளும் முதல்–அமைச்சரை மக்கள் இன்முகத்தோடு வரவேற்கின்றனர். மக்கள் ஆதரவும் பெருகி உள்ளது.
முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் ஒருங்கிணைந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகின்றார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன்பெற உள்ளனர்.
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு அந்நிய முதலீடு பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வருகிற ஜூன் மாதம் இறுதிக்குள் 28 லட்சம் மாணவ –மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் 8, 9, 10–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கும் மினி மடிக்கணினிகள் வழங்கப்படும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உதாரணமாக வேளாண் சம்பந்தமான வாக்குறுதிகள், நதிகள் இணைப்பு இவற்றை கூறலாம். சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். விடுமுறை நாட்களில் மாணவ –மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.