காரைக்குடியில் தங்கும் விடுதியில் பணத்துடன் கோவையை சேர்ந்தவர்கள் பதுங்கலா? 3 பேர் சிக்கியதால் பரபரப்பு: 2 கார்களில் தப்பியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை


காரைக்குடியில் தங்கும் விடுதியில் பணத்துடன் கோவையை சேர்ந்தவர்கள் பதுங்கலா? 3 பேர் சிக்கியதால் பரபரப்பு: 2 கார்களில் தப்பியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 11 April 2019 4:00 AM IST (Updated: 11 April 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

கோவையை சேர்ந்தவர்கள் பணத்துடன் காரைக்குடியிலுள்ள தங்கும் விடுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வருமானவரித்துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 3 பேர் சிக்கிய நிலையில் காரில் தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பஸ்நிலையம் அருகேயுள்ள ஒரு தங்கும்விடுதியில் கோவை பதிவெண் கொண்ட 3 காரில் வந்த சிலர் பணத்துடன் பதுங்கி இருப்பதாக வருமானவரித் துறையினருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

அதிகாரிகள் வரும் தகவலை அறிந்ததும் அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியே வந்து கார்களில் ஏறி தப்ப முயற்சித்தனர். அதிகாரிகள் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் 2 கார்கள் அங்கிருந்து மின்னலென மறைந்து விட்டன. ஒரு கார் மட்டும் சிக்கியது. உடனடியாக அதில் இருந்த 3 பேரை அதிகாரிகள் மடக்கினர்.

அந்த 3 பேரையும் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றார்கள். அவர்களிடம் விசாரணை நடந்தது. அறையிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 10-மணிக்கு மேலும் நீடித்தது.

இதேபோல தொழில் அதிபர் ஒருவரது வீடு மற்றும் தொழிற்சாலையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அங்கு பணம், ஆவணங்கள் சிக்கியதா என்பது தெரியவில்லை. மாலையில் தொடங்கிய சோதனை இரவும் நீடித்தது. அந்த பகுதியில் தேர்தல் பறக்கும்படையினரும் போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

காரைக்குடியில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் விடுதியில் இருந்து வெளியேறி 2 கார்களில் தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Next Story