நீதிமன்றத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது


நீதிமன்றத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2019 3:45 AM IST (Updated: 11 April 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியர் உள்பட 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கடுவங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). இவர், திருவாரூர் துர்க்காலயா சாலையில் இயற்கை முறை பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் சக்திவேல் (45) என்பவருடன் அறிமுகமாகியுள்ளார். அப்போது சக்திவேல் திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், சென்னை ஆகிய நீதிமன்றங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அப்பணிக்கு செல்ல விரும்பினால் பணியில் சேர்த்து விடுகிறேன். அதற்கு ரூ.2½ லட்சம் செலவு ஆகும். முன்பணமாக ரூ.1 லட்சம் தர வேண்டும். மீதிப்பணத்தை பணி உத்தரவுக்கான ஆணை வந்த பிறகு தரலாம் என கூறினார்.

மேலும் வேறு நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக சக்திவேல் உறுதி அளித்துள்ளார். இதை நம்பிய சுரேஷ் தனது சகோதரர்களான அழகர், தாசன், நண்பர்களான (மற்றொரு) சுரேஷ், தர்மராஜ், தினேஷ், சக்திவேல் (மற்றொரு நண்பர்) ஆகியோரிடமும் தெரிவித்து, அவர்களிடம் இருந்து நீதிமன்ற வேலைக்காக மொத்தம் ரூ.7 லட்சம் சக்திவேலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நீண்ட நாட்களாகியும் யாருக்கும் பணி உத்தரவு கிடைக்கவில்லை.

இதுகுறித்து சக்திவேலிடம் கேட்டபோது திருவாரூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் கோவிந்தலட்சுமி (43) என்பவரிடம் பணத்தை கொடுத்துவிட்டதாகவும், பணி வந்து விடும் என்று அவர் தெரிவித்தார். இந்தநிலையில் சுரேஷின் நண்பரான சக்திவேலுக்கு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணி கிடைத்ததால் ரூ.1 லட்சம் மட்டும் திரும்ப பெற்றுள்ளனர். மீதமுள்ள ரூ.6 லட்சத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. மேலும் பணத்தை கேட்டதால் கோவிந்தலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக சுரேஷிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுரேஷ் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சக்திவேல், கோவிந்தலட்சுமி ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக 83 பேரிடம் ரூ.83 லட்சம் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், கோவிந்தலட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story