தபால் ஓட்டுப்பதிவை ரத்து செய்யக்கோரி அ.ம.மு.க.–தே.மு.தி.க. போராட்டம்
தபால் ஓட்டுப்பதிவை ரத்து செய்யக்கோரி திருவொற்றியூரில் அ.ம.மு.க.– தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை நடைபெற்றன. அதைதொடர்ந்து மதியம் தபால் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 60 தபால் ஓட்டுகள் பதிவாகின.
இந்தநிலையில் தபால் ஓட்டுப்பதிவு தி.மு.க.வுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டது. மற்ற கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி மாலையில் 100–க்கும் மேற்பட்ட அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினர் தபால் ஓட்டுப்பதிவை ரத்து செய்யக்கோரி, தபால் ஓட்டுப்பதிவு பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அங்கேயே தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இனிமேல் அழைப்பு விடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.