மயிலாடுதுறை தொகுதியில் முறைகேடுகளை தடுக்க 24 பறக்கும் படைகள் தேர்தல் நடத்தும் அதிகாரி பேட்டி


மயிலாடுதுறை தொகுதியில் முறைகேடுகளை தடுக்க 24 பறக்கும் படைகள் தேர்தல் நடத்தும் அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 12 April 2019 4:15 AM IST (Updated: 12 April 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ்குமார் கூறினார்.

கும்பகோணம்,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கும்பகோணம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் பட்டியல், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணி நிறைவடைந்து உள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக நாகை மாவட்ட கலெக்டரும், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சுரேஷ்குமார் கும்பகோணம் சிறியமலர் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று வந்தார். அப்போது அவர் வேட்பாளர் பெயர் பட்டியல், சின்னம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. தபால் ஓட்டுகளை அளிக்க கால அவகாசம் உள்ளது. வாக்கு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணி முழுமை அடைந்துள்ளது.

எந்திரங்களின் செயல்பாடு திருப்தி அளிக்கும்படி உள்ளது. மயிலாடுதுறை தொகுதி தேர்தலில் முறைகேடுகளை தடுக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக இதுவரை 35 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. போலீஸ் படைகளை நிர்வகிக்க சிறப்பு போலீஸ் பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பதற்றமான வாக்குச்சாவடிக்கு தேவையின் அடிப்படையில் மத்திய பாதுகாப்பு படை அனுப்பப்படும். மேலும் அந்த வாக்குச்சாவடிகளை கேமிராக்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கும்ப கோணம் உதவி கலெக்டர் வீராசாமி, தாசில்தார் நெடுஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story