அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர், வடமதுரை, ரெட்டியார்சத்திரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி நடந்தது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தர்மா மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதித்யா கார்த்தி (வயது 19), விஜயபாண்டி (20), அசோக்குமார் (19), சூர்யாகுமார் (17) என்று தெரியவந்தது. இவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் தம்மணம்பட்டி பிரிவில் கன்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சம்மந்தன் (25) என்பவரை அரிவாளால் வெட்டி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.
இதேபோல் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்மணம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை வழிமறித்து செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி மாவட்டத்தின் பிற இடங்களிலும் சிலரை அடித்து செல்போன், பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 12 செல்போன்கள், 2 அரிவாள்கள், ஒரு கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story