தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 13 April 2019 4:40 AM IST (Updated: 13 April 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

பல்லடம்,

பல்லடம் அருள்புரம் செந்தூரான் காலனி, மணிகாம்பவுண்டை சேர்ந்தவர் ராஜாராம் (வயது22). இவர் அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6.5.2012 அன்று ராஜாராம் மற்றும் அவரது நண்பர்கள் மணிகாம்பவுண்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த காலனியின் பக்கத்தில் உள்ள எம்.எம்.எஸ்.காம்பவுண்டை சேர்ந்த அலெக்ஸ் (30) அங்கு வந்துள்ளார். ராஜாராம் அலெக்சிடம் இங்கு எதற்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ் அருகில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து ராஜாராமை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் ராஜாராமிற்கு இடது கை, இடது வயிறு, புருவம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து ராஜாராம் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அலெக்சை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா, அலெக்சுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பொன்னுசாமி ஆஜராகி வாதாடினார். அலெக்ஸ் தற்போது ஜாமீனில் வெளியே வந்து வால்பாறையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story