மறையூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை துரத்திய காட்டுயானை தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
மறையூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காட்டுயானை துரத்தியது. மேலும் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மறையூர்,
மறையூர் வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், நீரூற்றுகள் வறண்டன. இதனால் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு மற்றும் தோட்டங்களுக்குள் வனவிலங்குகள் படையெடுக்க தொடங்கி உள்ளன. இதிலும் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன.
மறையூர், கீழாந்தூர், குகநாதபுரம், பெருமலை, புத்தூர், குளச்சிவயல் பகுதிகளில் இரவு, பகலாக காட்டுயானைகள் உலா வருகின்றன. சுமார் 30–க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம், கூட்டமாக விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன. பகல் நேரத்திலும் காட்டுயானைகள் தேயிலை, ஏலக்காய், மிளகு தோட்டங்களில் உலா வருகின்றன. இதனால் வேலைக்கு கூட செல்ல தொழிலாளர்கள் தயங்குகின்றனர். இதுமட்டுமின்றி மறையூர்–மூணாறு சாலையில் வாகன ஓட்டிகளை வழிமறித்து தாக்குகின்றன.
நேற்று முன்தினம் கூட மறையூர் கோட்டகுளம் பகுதியை சேர்ந்த கிரீஷ் (வயது 24) என்பவர் காந்தலூருக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மறையூர்–மூணாறு சாலையில் வெட்டுக்காடு பகுதியில் வந்தபோது, 8 காட்டுயானைகள் சாலையை கடந்துள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். அப்போது காட்டுயானைகளின் ஒன்று அவரை வேகமாக விரட்டியது. இருப்பினும் அவர் மனம் தளராமல் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றதால் உயிர் தப்பினார்.
காட்டுயானைகள் தொடர் அட்டகாசத்தல் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.