நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மாநில கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் - தேவேகவுடா நம்பிக்கை


நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மாநில கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் - தேவேகவுடா நம்பிக்கை
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 11:43 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மாநில கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,


துமகூருவில் நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் சில மாநில கட்சிகள் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏனெனில் மாநில கட்சிகளால் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது. அது சாத்தியமில்லை. நாட்டில் அரசியலமைப்பு சீர்குலைந்து விட்டது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இதற்காக மாநில கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு காங்கிரசுடன், ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது. இதனால் பா.ஜனதாவால் ஆட்சிக்கு வர முடியாமல் போனது. அதனால் மாநில கட்சிகள் அனைத்தும் காங்கிரசுடன் கைகோர்க்க வேண்டும்.

எந்த ஒரு அரசியல் நோக்கத்துடனும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

நாட்டில் உள்ள சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு எனது பங்கும் வேண்டும் என்பதால், இந்த தேர்தலில் துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story