தனியார் பஸ்சில் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் ரீசார்ஜ் கூப்பன்கள் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை


தனியார் பஸ்சில் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் ரீசார்ஜ் கூப்பன்கள் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 7:54 PM GMT)

தனியார் பஸ்சில் கொண்டு சென்ற ரூ.1¾ லட்சம் ரீசார்ஜ் கூப்பன்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சூலூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமான பணம் அல்லது பொருட்கள் கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கோவையை அடுத்த சூலூர் செஞ்சேரி பகுதியில் பறக்கும் படை அதிகாரி சந்தோஷ் விஜயராகவன் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் டிரைவரின் இருக்கை அருகில் ஒரு பார்சல் கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக செல்போன் ரீசார்ஜ் கூப்பன்கள் இருந்தன.

இதுகுறித்து பஸ் டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், பல்லடம் பகுதியில் இருந்து ஒருவர் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருக்கும் ஒருவரிடம் கொடுக்க சொல்லி பார்சலை தந்ததாகவும், அந்த நபர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் டிரைவர் கூறினார்.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கூறுகையில், கைப்பற்றப்பட்ட ரீசார்ஜ் கூப்பன்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 69 ஆயிரம் என்றும், அந்த ரீசார்ஜ் கூப்பன்கள் அனைத்தும் ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களின் சில்லறை ரீசார்ஜ் கூப்பன்கள் என்றனர். இதன் பின்னர் அந்த கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரீசார்ஜ் கூப்பன்கள் சூலூர் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story