திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே, தி.மு.க. நிர்வாகி வணிக வளாகத்தில் வருமானவரித்துறை சோதனை


திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே, தி.மு.க. நிர்வாகி வணிக வளாகத்தில் வருமானவரித்துறை சோதனை
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 7:55 PM GMT)

திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே தி.மு.க. நிர்வாகியின் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே இந்திராநகரை சேர்ந்தவர் மணிகண்டன். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தி.மு.க. பிரமுகர் ஒருவரின் நெருங்கிய நண்பர் ஆவார். இவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 1½ மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயன். இவர், தி.மு.க. வர்த்தகர் அணியின் மாநில இணை செயலாளர் ஆவார். இவருக்கு அதே பகுதியில் வணிக வளாகம் உள்ளது. அதில் அழகுநிலையம், உடற்பயிற்சி நிலையம், ஜவுளிக்கடை உள்ளிட்டவை இருக்கின்றன. அந்த வணிக வளாகம், மணிகண்டனின் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் ஒரு காரில் அங்கு வந்தனர். பின்னர் ஜெயனுக்கு சொந்தமான வணிக வளாகத்துக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வணிக வளாகத்தின் அலுவலகம் மற்றும் கடைகளில் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

கணக்கில் வராத பணம் எதுவும் இருக்கிறதா? என்று ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர். அப்போது அங்கு இருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய அந்த சோதனை 11 மணி வரை மொத்தம் 4 மணி நேரம் நடைபெற்றது. எனினும், பணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் தி.மு.க. பிரமுகரின் நண்பரான மணிகண்டனின் வீடு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகத்திலும், நேற்று அந்த அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ள தி.மு.க. நிர்வாகியின் வணிக வளாகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கும் நேரத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story