குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்ல எதிர்ப்பு: நிலஅளவீடுக்கு வந்த ஊழியர்கள் 2 பேர் சிறைபிடிப்பு காங்கேயம் அருகே பரபரப்பு


குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்ல எதிர்ப்பு: நிலஅளவீடுக்கு வந்த ஊழியர்கள் 2 பேர் சிறைபிடிப்பு காங்கேயம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 10:29 PM GMT)

காங்கேயம் அருகே குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலஅளவீடுக்கு வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரை விவசாயிகள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம்,

பாரத் பெட்ரோலிய நிறுவனம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு பூமிக்கடியில் பெட்ரோல் கொண்டு செல்வதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளது. இதில் கொச்சியில் இருந்து கோவை இருகூர் வழியாக கரூர் வரை பெட்ரோல் கொண்டு செல்வதற்காக பூமிக்கடியில் குழாய் அமைத்து உள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் அலகுமலை பகுதியிலிருந்து இணைப்பு எடுத்து காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட நல்லிபாளையம் வழியாக சேலம் மார்க்கமாக பெங்களூரு தேவனகொந்திவரை மேலும் ஒரு குழாய் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது. அந்த தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் நேற்று மதியம் 12 மணியளவில் சிவன்மலை நல்லிபாளையம் பகுதியில் விவசாய விளை நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற விவசாயிகள் இது பற்றி அவர்களிடம் விசாரித்த போது பூமிக்கு அடியில் பெட்ரோலிய குழாய் அமைக்க நிலத்தை அளவீடு செய்வதாக கூறினார்கள். இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நல்லிபாளையம், அரசம்பாளையம், சிவன்மலை, படியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100 பேர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரை சிறைபிடித்து தென்னை மரத்தின் அருகே உட்கார வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பணியாளர்கள் 2 பேரை விவசாயிகள் விடுவித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–

எங்களுடைய விளை நிலங்களுக்குள் எந்தவிதமான அனுமதியும் இன்றி வந்து தனியார் நிறுவனத்தினர் நில அளவீடு செய்வதை கண்டிக்கிறோம். விளைநிலங்களில் வழியாக பெட்ரோல் குழாய் அமைக்க முயற்சித்தால் பின்னாளில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும். விளைநிலங்களும் பாதிக்கப்படும். எனவே விளைநிலங்களின் வழியாக பெட்ரோல் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் முடிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைவிட வேண்டும். சாலை மார்க்கமாக பூமிக்கடியில் பெட்ரோல் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story