நரேந்திரமோடி காவலாளி அல்ல சர்வாதிகாரி சீர்காழியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்


நரேந்திரமோடி காவலாளி அல்ல சர்வாதிகாரி சீர்காழியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 16 April 2019 11:15 PM GMT (Updated: 16 April 2019 2:52 PM GMT)

நரேந்திரமோடி காவலாளி அல்ல சர்வாதிகாரி என்று சீர்காழியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சீர்காழி,

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 27 நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். நாகை மாவட்டம் எனது தாய் மண். இந்த மாவட்டத்திற்கு காவிரி உரிமை மீட்பு, கஜா புயல் உள்ளிட்டவைகளுக்கு நேரில் வந்துள்ளேன். கஜா புயலின் போது 4 நாட்கள் தங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளேன். தமிழகம் முழுவதும் நரேந்திரமோடிக்கு எதிரான அலையும், ஸ்டாலினுக்கு ஆதரவான அலையும் வீசுகிறது. நரேந்திரமோடி தன்னை காவலாளி என கூறுகிறார். ஆனால், மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.


மேலும், தூத்துக்குடி துப்பாக்கிசூடு கலவரத்தின்போது 18 பேர் உயிரிழந்தனர். இதேபோல் ரபேல் போர் விமானம் வாங்குவதில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது. அப்போது காவலாளி என கூறிக்கொள்ளும் நரேந்திரமோடி எங்கிருந்தார். அவர் காவலாளி அல்ல சர்வாதிகாரி. ‘நீட்‘ தேர்வை மத்திய அரசு திணிப்பதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

 தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு பொள்ளாட்சியே சாட்சி. தமிழக மக்கள் இனிமேல் ஏமாற தயாராக இல்லை. எனவே தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து வாக்களிக்க கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story