மோடி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் திருவாரூர், நாகை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


மோடி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் திருவாரூர், நாகை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:15 PM GMT (Updated: 16 April 2019 2:56 PM GMT)

மோடி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று திருவாரூர், நாகை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர்,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். முதன் முதலாக அவர் திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்ட அவர் நேற்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை திருவாரூர், நாகை மாவட்டங்களில் மேற்கொண்டார்.

நேற்று அவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரான நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து குடவாசல், கொரடாச்சேரி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீர்மூளை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்தார்.


கொரடாச்சேரி பகுதியில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

வருகிற 18–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராசுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், திருவாரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் இங்கு புதிதாக வருபவன் அல்ல. என்றைக்கும் உங்களுடன் இருப்பவன். உங்கள் குறைகளை கேட்பவன். இந்தத் தேர்தல் மத்தியில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். அவர் வீட்டுக்குப் போனால் தமிழகத்தில் உள்ள எடப்பாடியும் வீட்டுக்குப் போவார். மோடி சர்வாதிகாரி அதனால் அவரை வீட்டுக்கு அனுப்புவோம். அதேபோல் தமிழகத்தில் உள்ள உதவாக்கரையான எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்புவோம்.

நான் உதவாக்கரை என்று சொன்னால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது. நான், விவசாயி என்கிறார். விவசாயி என்றால் நான் வரவேற்கிறேன். அவர் விவசாயி அல்ல, வி‌ஷவாயு. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கூட உடனடியாக வந்து சந்தித்து ஆறுதல் கூறவில்லை. ஒரு வாரம் கழித்து அதுவும் ஹெலிகாப்டரில் வந்தார். விவசாயிகளாகிய நீங்கள் புயலில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து தவித்தீர்கள். அதை அறிந்து நான் மறுநாளே உங்களை வந்து சந்தித்து ஆறுதல் கூறினேன். அந்த அடிப்படையில் நான் உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளேன்.


அதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதவர்தான் பிரதமர் மோடி. ஏன் ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. தமிழக அரசு கேட்ட நிதி உதவியையும் கூட அவர் அளிக்கவில்லை. தமிழகத்தைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. விவசாயிகளைப் பற்றி சிந்திக்காத அவர். விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் டெல்லியில் நடத்திய போது கூட அவர்களை அழைத்து பேசவில்லை. ஆனால் பணக்காரர்கள். நடிகைகளை அழைத்து பேசினார்.

எனவே இந்த தேர்தலில் அவருக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும். இது நமது மண். நான் மண்ணின் மைந்தராக வந்துள்ளேன். கலைஞரால் உருவாக்கப்பட்டவன். அந்த அடிப்படையில் நான் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். இந்த தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்பொழுது நாம் விரும்பும் ஆட்சி மத்தியில் அமையும். அப்படி அமைந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.


தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 97 பேர் உள்ளனர் தற்போது 18 இடங்களுக்கும் மேலும் நான்கு இடங்களுக்கும் என 22 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் அடுத்தது நமது ஆட்சி தான். மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு தூக்குக்கயிறு போல தொங்கிக்கொண்டு உள்ளது. அதையும் மோடிதான் காப்பாற்றி வைத்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரைப்போல் இனி யாரும் பிறக்க முடியாது. அவர் கற்றுத்தந்த பாடத்தை தான் நாங்கள் படித்துள்ளோம். அதன் அடிப்படையில் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறேன்.


நான் திடீரென்று அரசியலுக்கு வரவில்லை. படிப்படியாகத்தான் வந்துள்ளேன். 1989–ம் ஆண்டில் இருந்து நான் பணியாற்றி வருகிறேன். கட்சி பொறுப்புகள், எம்.எல்.ஏ., மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து மக்கள் பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். மத்தியில் பாசிச ஆட்சி நடைபெறுகிறது.

கொரடாச்சேரி பகுதியில் முன்னாள் பிரதமர் பிரதமர் நேருவால் திறந்து வைக்கப்பட்ட அரசு மருத்துவமனை இப்போது எந்த நிலையில் இருக்கிறது. கட்டிடத்தை கூட காணவில்லை. அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். மக்களுக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காவிரி டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் படும். மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடப்படும், உயர் அழுத்த மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக புதைக்கப் அனுமதிக்கப்படாது. விவசாய கூலித்தொழிலாளி குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்படும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 2500. கரும்புக்கும் 4 ஆயிரம் வழங்கப்படும். தென்னிந்தியாவில் உள்ள நதிகளை இணைக்கவேண்டும். தரங்கம்பாடியில் பெரிய துறைமுகம் அமைக்கப்படும். பச்சைப்பயிறு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படும். நீண்டகாலமாக வழங்கப்படாமல் உள்ள போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்படும். வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக உயர்த்தப்படும். நிலமற்ற ஏழை தொழிலாளர்கள் 5 பவுன் வரை அடகு வைத்து உள்ளவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாய கடன், கல்விக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். ஆறுகள் தூர்வாரி தடுப்பணைகள் கட்டப்படும். இப்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..

கருணாநிதி இறந்தபோது அவருடைய உடலை அடக்கம் செய்ய அண்ணா சமாதி அருகே 6 அடி நிலம் கூட இந்த அரசு நமக்கு தரவில்லை. நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யின் வீட்டுக்கு சென்று சந்தித்து கையை பிடித்து கெஞ்சினேன். ஆனால் அவர்கள் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கித் தர மறுத்துவிட்டனர். அதன் பின்னால் நாம் நீதிமன்றம் மூலம் இடத்தைப் பெற்று அண்ணா சமாதி அருகே அருகே கருணாநிதியை அடக்கம் செய்தோம். ஆறு அடி நிலம் கொடுக்காத இவர்களுக்கு தமிழகத்தில் நாம் இடம் கொடுக்கலாமா?. அதற்கு விடை காணும் தேர்தல் தான் இந்த தேர்தல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story