கரூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் பயங்கர மோதல்


கரூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் பயங்கர மோதல்
x
தினத்தந்தி 16 April 2019 11:15 PM GMT (Updated: 16 April 2019 7:57 PM GMT)

கரூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது அ.தி.மு.க.-தி.மு.க. வினர் இடையே பயங்கரமாக மோதல் ஏற்பட்டது. அப்போது பிரசார வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கல்வீச்சில் போலீஸ்காரர் உள்பட சிலர் காயம் அடைந்தனர்.

கரூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. மேலும் நேற்று மாலையே நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட, அத்தொகுதியில் வாக்காளராக இல்லாத அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கரூரில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களுடைய இறுதிக்கட்ட பிரசாரத்தை கரூர் மனோகரா கார்னரில் மேற்கொள்வது என்று சில நாட்களுக்கு முன்பே முடிவு செய்து, அதற்கான அனுமதி கேட்டனர். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே 16-ந்தேதி மதியத்திற்கு மேல் அது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று மதியம், 2 கட்சிகளில் ஏதாவது ஒரு வேட்பாளருக்கு அனுமதி கொடுத்தால், கரூர் மனோகரா கார்னரில் தகராறு ஏற்படும் சூழல் நிலவியது. இந்நிலையில் அந்த இடத்தில் யாரும் பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது என்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரி அன்பழகன் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா, பஸ் நிலைய நுழைவு வாயில் மற்றும் கோவை ரோடு ஆகிய இடங்களில் துணை ராணுவ படையினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரூர் மாவட்ட போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றின் பதிவுகள் ரகசிய இடத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டது.

மேலும் கரூர் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான ஜவகர்பஜார், பழைய பைபாஸ் ரோடு, கோவை ரோடு, திண்ணப்பா கார்னர் ஆகிய இடங்களிலும் துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரூர் பஸ் நிலைய பகுதியில் யாரும் நுழைய முடியாத வகையில், அந்த பகுதியை போலீசார் தங்களுடைய பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு லத்தியுடன் நின்று, சந்தேகப்படும்படி வந்த நபர்களை பிடித்து விசாரித்து அனுப்பினர்.

இந்த நிலையில் கிருஷ்ணராயபுரம், புலியூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரங்களை மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நேற்று மதியம் 3.15 மணியளவில் கரூர் வெங்கமேடு சேலம் மெயின்ரோட்டில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஆதரவாக திருச்சி சிவா எம்.பி., நாஞ்சில் சம்பத், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அங்கு பேசி கொண்டிருந்தனர்.

இதற்கிடையே வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க.வினர், வேட்பாளர் தம்பிதுரையை அழைத்து கொண்டு ஊர்வலமாக கரூர் நோக்கி வந்தனர். அப்போது இடையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினர் நின்று கொண்டிருந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளருடன் வந்தவர்கள், பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அந்த இடத்திற்கு அருகே வந்த அ.தி.மு.க.வினரை கயிறு மூலம் போலீசார் தடுத் தனர். இந்நிலையில் எதிர் எதிரெ நின்ற அ.தி.மு.க.-தி.மு.க. கூட்டணியினர் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கம்பு, கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். பின்னர் கீழே கிடந்த கற்களை எடுத்து சிலர் வீசினர். இதனால் அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் சிதறி ஓடினர்.

கல்வீச்சின்போது அங்கு நின்ற உளவுப்பிரிவு போலீஸ்காரர் செந்திலுக்கு தலையில் கல் விழுந்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு நின்ற தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் பிரசார வேனை, சிலர் அடித்து நொறுக்கினர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பெண்களை தடுத்து நிறுத்தி தாக்குதல் முயற்சி நடந்தது. இதையறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் இறுதியாக வந்த வாகனங்களை வழிமறித்து தி.மு.க. உள்பட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க. வாகனங்கள் மீது அவர்கள் கல்வீசினர். பின்னர் போலீசார் அறிவுறுத்தியதன் பேரில் ஒவ்வொரு வாகனமாக சென்றது. அப்போது சிலர் அங்கிருந்த அ.தி.மு.க. பிரசார பஸ் ஒன்றை கம்பி, கட்டையால் அடித்து நொறுக்கினர். இதனால் சாலையில் கண்ணாடிகள் சிதறி கிடந்தன. 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு துணை ராணுவ படையினர் துப்பாக்கியுடனும், போலீசார் லத்தியுடனும் நின்றனர்.

இதற்கிடையே தி.மு.க.வினர் கரூர் லைட்அவுஸ் கார்னர் வழியாக சென்று தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவில் அருகே இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர். அ.தி.மு.க.வினர் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே உள்ள தங்களது பணிமனை முன்பாக இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க- தி.மு.க. உள்ளிட்ட கட்சியை சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்டோர் இருசக்கர வாகனங்களில் கட்சி கொடியை பிடித்து கொண்டு ஆங்காங்கே ஊர்வலம் சென்றனர். இதனால் சிறு, சிறு மோதல் சம்பவங்கள் அரங்கேறின. இதன் காரணமாக கரூர் கலவர பூமியாக மாறியது போல் இருந்தது.

இந்நிலையில் பிரசாரம் நிறைவடைந்ததால், இன்று (புதன்கிழமை) எவ்வித பிரசாரமோ, பொதுக்கூட்டமோ நடத்தக்கூடாது என்பது தேர்தல் விதியாகும்.

மேலும் மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கிறது. மேலும் தேர்தல் விதிகளை மீறி யாரும் செயல்படுகின்றனரா? என்பதை தேர்தல் குழுவினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story