மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரி 21 கோவில்களில் கிராம மக்கள் மனு


மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரி 21 கோவில்களில் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 17 April 2019 4:30 AM IST (Updated: 17 April 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரி 21 கோவில்களில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி கிராமத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்தலமான பறவைகள் சரணாலய ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 1,100 ஏக்கர் பரப்பளவு உடையதாகும். தற்போது நிலவிவரும் தட்பவெப்ப நிலை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் வரத்து மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதனை தடுக்கும் வண்ணம் மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து மழைக்காலங்களில் அதிக அளவில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை கரைவெட்டி ஏரியில் சேமிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையாகும்.

அப்படி செய்வதின் மூலம் இப்பகுதியை சுற்றியுள்ள பல ஏரி மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகரித்து விவசாயம் செழிப்படையும். சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும் விவசாயத்தையே மூலதனமாக கொண்டு உள்ள பல விவசாய குடும்பங்கள் பயன் பெற வாய்ப்பாக அமையும். இதனால் அந்த கிராம மக்கள் இத்திட்டத்தை செயல் படுத்த கோரி பலமுறை மனுக்களையும் கொடுத்துள்ளனர். போராட்டங்களையும் செய்துள்ளனர்.

இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. மேலும் நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் கூட இத்திட்டத்தை செயல்படுத்தி தருகிறேன் என வாக்குறுதியையும் அளிக்கவில்லை என கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்நிலையில் நேற்று இத்திட்டத்தை செயல்படுத்த கோரி அப்பகுதியை சுற்றியுள்ள விநாயகர், மதுர காளியம்மன், பெரியசாமி, மாரியம்மன், செல்லியம்மன், சிவன், கருப்பு சுவாமி, மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், காளியம்மன், தையல்நாயகி, முத்தையன், கரும்பாயிரம், நல்லமுத்தாயி, அய்யனார், ஓம்சக்தி, பெருமாள், முருகன், துர்க்கையம்மன் மற்றும் கிறித்தவ ஆலயம் உள்பட மொத்தம் 21 கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி அவர் களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி சுவாமி சிலைகளின் பாதங்களில் வைத்துச்சென்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, அரசாங்கத்தை நம்பி இனி பயனில்லை ஆண்டவனை தான் நம்புகிறோம்.

எனவே தான் மத வேறுபாடின்றி கிறிஸ்தவ ஆலயங்கள் உள்பட அனைத்து கோவில்களுக்கும் சென்று கடவுளிடம் முறையிட்டு எங்களின் மனுவை அச்சிலைகளின் பாதங்களில் வைத்து விட்டு வந்து இருக்கிறோம். இனி ஆண்டவன் அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் நல்ல புத்தியை கொடுத்து அதற்கான வேலைகளை செய்ய வைக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றனர். 

Next Story